Google Ads

குட்டி கதைகள் பிறந்த நாள் பரிசு --- BIRTH DAY GIFT




"அப்பா, எப்படியானும் அந்த குருவியை காப்பாத்துங்க பா !" அஸ்வின் அந்த குருவியை பார்த்துக்கொண்டே சொன்னான். 

அஸ்வினுக்கு ரொம்ப அழுகையாக வந்தது. ஒரு சிட்டுக்குருவி மின்விசிறியில் அடிபட்டு கீழே விழுந்துவிட்டது. அவனுடைய அப்பா அந்த குருவியைக் காப்பாற்ற முயன்று கொண்டிருந்தார். அந்த குருவி வலியுடன் போராடிக்கொண்டிருப்பதை பார்க்க பார்க்க அவனுக்கு துக்கம் தாங்கவில்லை.

அவனுக்கு ஏற்கனவே மூட் சரியில்லை.முன் தினம்தான் அஸ்வினுக்கு அவன் வீட்டில் பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்தது. அவனுடைய நண்பர்கள் பலரை கூப்பிட்டிருந்தான். எல்லோரும் அவனுக்கு கிப்டுகள்  வாங்கி வந்திருந்தார்கள். அவனுடைய பெஸ்ட் பிரென்ட் நிகில் அவனுக்கு ஒரு வாழைக்கன்று பரிசாக கொடுத்தான்.

கொண்டாட்டம் முடிந்தபின் ஒவ்வொரு கிப்டாக பிரித்து பார்த்துக்கொண்டிருந்தான். நிகில் கொடுத்த வாழைக்கன்றை மட்டும் அலட்சியமாக தூக்கி எறிந்தான்.

அவன் அம்மா "அஸ்வின், வாழைக்கன்றை நம் தோட்டத்தில் நட்டு வளர்க்கலாம். நிகில் எவ்வளவு முன்யோசனையுடன் உனக்கு பரிசளித்திருக்கிறான்!" என்று சொன்னாள்.

"போம்மா, நான் அவன் பர்த்டேக்கு நல்ல லீகோ டாய் கொடுத்தேன். எனக்கு இதைப்போய் பரிசா கொடுத்திருக்கார். இதை வெச்சு நான் விளையாடவா முடியும் ?" என்று அழுகையும் கோபமுமாக கேட்டான்.

அவன் அம்மா சாந்தமாக அவனிடம் " வாழைக்கன்றை நாம் நட்டு , தினமும் தண்ணீர் விட்டு அது செடியாக வளர்ந்து மரமாகி பூக்கள், காய்கள் கொடுக்கும்போது ரொம்பவும் சந்தோஷமாக இருக்கும். நீ வேணும்னா பாரேன்!" என்று அவனை சந்தோஷப்படுத்த முயன்றாள்.

இது நடந்து அடுத்த நாள்தான் அந்த சிட்டுக்குருவி ஜன்னல் வழியாக பறந்து வந்து மின்விசிறியில் லேசாக அடிபட்டு விழுந்தது.

அஸ்வினுடைய அப்பா எப்படியோ அதை மெல்ல கையில் ஏந்தி மெதுவாக ஒரு அட்டைப்பெட்டியில் வைத்தார். காயம் ஒன்றும் இல்லையென்றாலும் அந்த குருவி அதிர்ச்சியால்  நகரவில்லை.

"குருவி நல்லாத்தான் இருக்கு. நாளைக்கு பறந்துபோயிடும்!" என்று அவனுடைய அப்பா சமாதானம் சொன்னார்.

அதற்குள் அஸ்வினுடைய அம்மாஅவனை கூப்பிட்டு தோட்டத்தில் அந்த வாழைக்கன்றை நட வைத்தாள். அவன் வாழைக்கன்றுக்கு நீர் ஊற்ற தொடங்கி இரண்டு  நாட்கள்  ஆயிற்று.

"அம்மா, இது எப்போ மரமாகி காய் வரும்?" என்று பொறுமையின்றி  கேட்டான்.

"இன்னும் சில மாதங்கள் ஆகும்" என்று அம்மா பதில்  சொன்னாள்.

அவனுடைய அப்பா அதற்குள் அட்டைபெட்டியுடன் வெளியே வந்தார். அதை மெதுவாக திறந்து அந்த குருவியை மெல்ல வெளியில் விட்டார். முதலில் நொண்டி நொண்டி நடந்த குருவி மெதுவாக சுதாரித்துக்கொண்டு மேலே பறந்து பக்கத்தில் இருந்த மாமரத்தின் ஒரு கிளையின் மேல்  மேல் உட்கார்ந்துகொண்டது.

சில மாதங்கள் சென்றன. வாழைக்கன்று செடியாகி உயரமாக வளர்ந்துகொண்டிருந்தது அது காற்றில் மெதுவாக வளைந்து ஆடும் அழகை அஸ்வின் ரசிக்க ஆரம்பித்தான்.

ஒவ்வொரு நாளும் மெல்ல பக்கத்தில் இருந்த மாமரத்தை அஸ்வின் கவனித்துக்கொண்டே இருப்பான். அவனுக்கு அந்த சிட்டுக்குருவி திரும்பி அங்கே வருமா என்று ஒரு எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருந்தது. ஒரு நாள் நிறைய குருவிகள் அந்த மாமரத்தில் கிளையில் வரிசையாக உட்கார்ந்து கீச் கீச்சென்று கத்திக்கொண்டிருந்ததை ரசித்துக் கொண்டிருந்தான்.

திடீரென்று பலத்த காற்றுடன் மழை வர ஆரம்பித்தது. காற்று மிகவும் பலமாக இருக்கவே அஸ்வினுடைய அம்மா அவனை உள்ளே வரச்சொன்னாள். ஜன்னல் வழியாக வேடிக்கை பார்க்க ஆரம்பித்தான். அந்த குருவிகள் அங்கும் இங்குமாக பறந்து மாமரத்தின் கிளையின் மேல் உட்கார முடியாத அளவுக்கு காற்று அடித்தது. அந்த குருவிகள் உட்கார்ந்த கிளை வேகமாக ஆடி கீழே விழுந்தது,

குருவிகள் அங்கும் இங்கும் தேடி வாழைமரத்தின் மேல் உட்கார்ந்து கொண்டது. அந்த குருவிகள் வாழைமரத்தின் மேல் உட்கார்ந்துகொண்டு அதனோடு சேர்ந்து இப்படியும் அப்படியுமாக ஊஞ்சல் போல் ஆடிய காட்சி அஸ்வினுக்கு சிரிப்பாக இருந்தது.

அஸ்வின் நிகிலுக்கு மனதிற்குள் நன்றி சொன்னான். இயற்கையையம் ரசிக்க முடிந்தது அந்த குருவிகளுக்கு அடைக்கலமாக அந்த வாழைமரம் இருந்தது. இனிமேல் தானும் கன்றுகள், செடிகள் ஆகியவை பிறந்தநாள் பரிசாக கொடுக்கவேண்டும் என்று முடிவெடுத்தான்.

No comments

Powered by Blogger.